⬅ Back to Main Page
Profile Posted by: M Siraj
Other 📍 State: Others 📅 08-11-2026 🕒 07:13 AM 👁️ 170 Views

ரியாத் தமிழ்ச் சங்கத்தின் 4ஆம் ஆண்டு கைப்பந்துப் போட்டி: ஸ்பார்ட்டன்ஸ் பத்தா அணி மூன்றாவது முறையாக சாம்பியன்

Featured News Image

ரியாத்: சமூக, கலை, இலக்கியப் பணிகளுடன் விளையாட்டுத் துறையிலும் தனது பங்களிப்பைத் தொடர்ந்து விரிவுப்படுத்தி வரும் ரியாத் தமிழ்ச் சங்கம், நான்காம் ஆண்டு கைப்பந்து போட்டியை சிறப்பாக நடத்தி முடித்துள்ளது. இறுதிப் போட்டியில் ஸ்டார் பாய்ஸ் அணியை வீழ்த்திய ஸ்பார்ட்டன்ஸ் பத்தா அணி, மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி சாதனை படைத்தது.

News Image

ரியாத் அல்-மொத்தகதிமாஹ் பன்னாட்டுப் பள்ளி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் 12 அணிகள் பங்கேற்றன. அக்டோபர் 30-ஆம் தேதி காலை 6 மணிக்கு தொடங்கிய லீக் சுற்றுகள் காலை, மாலை என இரு அமர்வுகளாக நடைபெற்றது. ஒவ்வொரு அமர்விலும் 200-க்கும் மேற்பட்ட ரசிகர்கள் திரண்டு வீரர்களை உற்சாகப்படுத்தினர்.

லீக் சுற்றுகள் முடிவில் ஸ்னிப்பர்ஸ், ஸ்டார் பாய்ஸ், ஸ்பார்ட்டன்ஸ் பத்தா, ரெட் கேமல் ஆகிய நான்கு அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

தொடர்ந்து நவம்பர் 6ஆம் தேதி மாலை 7 மணி முதல் இரவு 11.30 மணி வரை அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகள் நடைபெற்றன. சுமார் 250க்கும் மேற்பட்ட ரசிகர்கள் முன்னிலையில் நடைபெற்ற விறுவிறுப்பான ஆட்டங்களில் ஸ்பார்ட்டன்ஸ் பத்தா, ஸ்டார் பாய்ஸ் அணிகள் இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.

இறுதிப் போட்டியில் இரு அணிகளும் சம பலத்துடன் விளையாடி, புள்ளிகளை மாறி மாறிப் பெற்று வந்தது ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிறச் செய்தன. இறுதியில் திறமையையும் அணியின் ஒருங்கிணைப்பையும் வெளிப்படுத்திய ஸ்பார்ட்டன்ஸ் பத்தா அணி வெற்றி பெற்று, மூன்றாவது முறையாக சாம்பியன் கோப்பையை தட்டிச் சென்றது.

ரியாத் தமிழ்ச் சங்கத் தலைவர் அலெக்ஸ் தியாகராஜன் தலைமையிலான நிர்வாகக் குழுவினர் வெற்றி பெற்ற அணிகளுக்கும் சிறப்பாக விளையாடிய வீரர்களுக்கும் கோப்பைகள் மற்றும் விருதுகளை வழங்கி கௌரவித்தனர்.

விருதுகள் மற்றும் வெற்றியாளர்கள்:

முதல் இடம்: ஸ்பார்ட்டன்ஸ் பத்தா

இரண்டாம் இடம்: ஸ்டார் பாய்ஸ்

மூன்றாம் இடம்: ஸ்னிப்பர்ஸ்

சிறந்த விளையாட்டு நேர்மைக்கான விருது: ரெட் கேமல்

ஆட்ட நாயகன்: தௌஃபீக் ரஹ்மான்

தொடர் நாயகன்: ஷேக் முஹம்மது

போட்டியை சிறப்பாக ஒருங்கிணைத்த விளையாட்டுக் குழு தலைவர் செந்தில், போட்டி ஒருங்கிணைப்பாளர் கவிமணி, இணை ஒருங்கிணைப்பாளர் சரவணன் உள்ளிட்ட ஒருங்கிணைப்பு குழுவினர், நிர்வாகக் குழு உறுப்பினர்கள், வீரர்கள், புரவலர்கள், நடுவர்கள், தன்னார்வலர்கள் மற்றும் ரசிகர்கள் அனைவருக்கும் சங்கத்தின் சார்பில் நன்றியும் பாராட்டுகளும் தெரிவிக்கப்பட்டன. இறுதியாக, தேசிய கீதத்துடன் நான்காம் ஆண்டு கைப்பந்து போட்டிகள் இனிதே நிறைவடைந்தது.

விளையாட்டின் மூலம் தமிழ்ச் சமூகத்தினரிடையே ஒற்றுமை, நட்பு மற்றும் ஆரோக்கியமான போட்டி மனப்பான்மையை வளர்த்து வரும் ரியாத் தமிழ்ச் சங்கத்தின் தொடர் முயற்சி, வெளிநாட்டில் வாழும் தமிழர்களின் சமூக ஒருமைப்பாட்டிற்கு மேலும் வலு சேர்ப்பதாக அமைந்தது.

M Siraj