ரியாத்: நபிகள் நாயகம் முஹம்மது (ஸல்) அவர்களின் காலத்தால் அழியாத புகழ்மிக்க வரலாறு, உன்னதப் பண்புகள், உயரிய போதனைகள் மற்றும் உலகளாவிய மனிதநேய விழுமியங்களை எடுத்துரைக்கும் “உலகம் வியந்த உத்தமர்” நூல் வெளியீட்டு விழா, நவம்பர் 6, 2026 வெள்ளிக்கிழமை, ரியாத் பத்தாவில் உள்ள டிமோரா ஹோட்டலில் சிறப்பாக நடைபெற்றது. ரஹ்மத்துல் இஸ்லாம் பப்ளிகேஷன்ஸ் மற்றும் பாத்தா தஃவா சென்டர் இணைந்து ஏற்பாடு செய்த நிகழ்ச்சி, அரபு நேஷனல் வங்கியின் (ANB) ரியாத் பிரிவு உயர் அதிகாரியும், இந்திய நிதி வல்லுநர்கள் பேரவையின் (IFPF) தலைவரும், இந்தியத் தூதரகத்தின் அகில இந்திய வழிகாட்டுதல் குழுவின் தமிழ்நாடு மாநில ஒருங்கிணைப்பாளருமான டாக்டர் மொஹிதீன் சலீம் அவர்களின் சிறப்பான தலைமையில் நடைபெற்றது.நிகழ்ச்சி, அல்-ஹாஃபிழ் தாவூத் ஷாதுலி அவர்களின் இனிய கிராஅத் உடன் தொடங்கியது. இந்தியன் வெல்ஃபேர் போரத்தின் (IWF) தலைவர் நூர் முஹம்மது வரவேற்புரை வழங்கினார். விழாவின் முக்கிய நிகழ்வாக, சவூதி அரேபியாவிற்கான இலங்கைத் தூதர் மேதகு ஓ.எல். அமீர் அஜ்வத் அவர்கள் நூலை வெளியிட்டு விழாவிற்கு சிறப்பு சேர்த்தார். விழாவிற்கு ஷேக் அபுல் ஹஸன் மதனி தலைமை தாங்கினார்.

தாயிஃப் நகரிலிருந்து வருகை தந்த ஷேக் அஸ்மி அப்துல் ஸலாம் யூசுஃபி நூல் அறிமுக உரையாற்றி அதன் சிறப்புகளையும் நோக்கத்தையும் எடுத்துரைத்தார். ஷேக் ரம்ஜான் பாரிஸ் மதனி சிறப்புரையாற்றினார். பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா காணொலி வாயிலாக தனது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.
நூலாசிரியர் ஷேக் எம்.எம். நூஹ் அல் தாஃபி, நூல் உருவான பின்னணி, அதன் நோக்கம் மற்றும் முக்கியத்துவம் குறித்து சிறப்புரையாற்றினார். கவிஞர் ஃபக்ருத்தீன் இப்னு ஹம்துன் வாழ்த்துரை வழங்கி, நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் உன்னத ஆளுமை மற்றும் காலத்தால் அழியாத புகழுக்கு தனது ஆழ்ந்த மரியாதை வெளிப்படுத்தினார். டாக்டர் சந்தோஷ் சிறப்புரையாற்றினார். காயல் நல மன்றத்தின் தலைவர் ஹைதர் அலி நிகழ்ச்சியைத் திறம்படத் தொகுத்து வழங்கினார். டாக்டர் மொஹிதீன் சலீம் நன்றியுரை வழங்கினார்.இந்த நிகழ்ச்சியில் இஸ்லாமிய அறிஞர்கள், மார்க்கப் பெரியவர்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றுச் சிறப்பித்தனர். தமிழகத்தைச் சேர்ந்த குடும்பங்கள், ஆண்கள், பெண்கள் மட்டுமின்றி, பல்வேறு மத பின்னணிகளை கொண்ட நண்பர்களும் திரளாகக் கலந்து கொண்டனர். நூல் வெளியீட்டின் போது ஏராளமானோர் ஆர்வத்துடன் நூலை வாங்கியது, அதன் கருத்துகள் மீதான மக்களின் ஈடுபாட்டை வெளிப்படுத்தியது.இந்நூலின் அடிப்படை நோக்கம், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு, ஒப்பற்ற நற்பண்புகள், உயரிய குணநலன்கள் மற்றும் உன்னதப் போதனைகளை அனைத்து தரப்பு மக்களிடமும் கொண்டு சேர்ப்பதுடன், அவற்றை அன்றாட வாழ்க்கையில் பின்பற்றுவதற்கான ஆர்வத்தை ஏற்படுத்துவதாகும். அன்பு, கருணை, நேர்மை, மனிதநேயம் மற்றும் சகோதரத்துவம் ஆகிய உலகளாவிய நற்பண்புகளை மக்களிடையே பரப்பி, இந்நூலின் செய்தி ஒவ்வொரு இல்லத்தையும் சென்றடைய வேண்டும் என்பதே ஏற்பாட்டாளர்களின் முக்கிய இலக்காகும்.இதனைக் கருத்தில் கொண்டு, அனைவரும் எளிதில் வாங்கிப் படிக்கும் வகையில் குறைந்த விலையில் நூல் விற்பனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விழாவில் பங்கேற்க இயலாதவர்களும், பரந்துபட்ட சமூகத்தினரும் நூலை வாங்கிப் படித்து, அதன் சிறப்பான கருத்துக்களை தங்களது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும் ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொண்டனர்.
இவ்விழாவின் வெற்றிக்குப் பங்களித்த மேடையிலும், திரைக்குப் பின்னாலும் உழைத்த அனைவருக்கும் ஏற்பாட்டாளர்கள் தங்களது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் உயரிய போதனைகள் பரப்பும் பயனுள்ள அறிவுக் கருவூலமாக இந்நூல் திகழ்ந்து, அன்பு, கருணை, நேர்மை மற்றும் உலகளாவிய சகோதரத்துவத்தின் செய்தியை எல்லைகளைக் கடந்து பல்லாயிரக்கணக்கான மக்களிடம் கொண்டு சேர்க்கும் என்ற நம்பிக்கையை ஏற்பாட்டாளர்கள் வெளிப்படுத்தினர். இந்நூல் சமூக நல்லிணக்கத்தையும் பரஸ்பர புரிதலையும் மேம்படுத்தி, நூலாசிரியர், ஏற்பாட்டாளர்கள் மற்றும் இப்பணியில் பங்களித்த அனைவருக்கும் நிலையான நற்பலன்களைப் பெற்றுத்தர இறைவனைப் பிரார்த்தித்தனர்.
M Siraj